தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் இவர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. கடைசியாக இவரது இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து இவர், இயக்குனர் வெற்றிமாறனின் கதை, திரைக்கதை வசனத்தில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி வெற்றிமாறன், கௌதம் மேனன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைய இருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க நடிகர் சிம்பு மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் ஜெயம் ரவி நடிக்க வாய்ப்புள்ளதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.