ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்… சென்சார் கொடுத்த சான்று…
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்துள்ளது.
வெறும் குரல் வழியாக தமிழகத்தில் பல கோடி மக்களின் மனதை வென்று, பின்னர் திரையில் தோன்றியவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவருடைய ரேடியோ வர்ணனைக்கும், கிரிக்கெட் கமெண்ட்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நானும் ரவுடிதான், காற்று வௌியிடை, இது என்ன மாயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,
இதையடுத்து எல்கேஜி படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமாகினார். அதன் பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தை இயக்கவும் செய்தார். தொடர்ந்து வீட்டுல விசேஷம், ரன் பேபி ரன் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இவை அனைத்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். சலூனில் முடி திருத்தும் கலைஞராக இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ளார். சத்யராஜ், லால் ,ரோபோ சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு யு சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி இருக்கிறது. வரும் ஜனவரி 25-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.