சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் இணைய போவதாகவும் அது சிவகார்த்திகேயனின் 24 வது படமாக உருவாகப் போவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி SK 24 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் எஸ்ஜே சூர்யா படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்பட்டது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்திலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் SK 24 படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள ராஷ்மிகா, கால்ஷீட் பிரச்சனை காரணமாக 2025 மார்ச் மாதத்திற்கு பின்னர் தான் கால்ஷீட் தர முடியும் என்று சொல்லிவிட்டாராம். எனவே மொத்தமாக மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.