நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி அப்பொழுது ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், அஜித் நடிப்பில் வெளியான ஏகன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 3 திரைப்படத்தின் தனுஷுக்கு நண்பனாக நடித்திருந்தார். இதற்கிடையில் மெரினா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். முதல் படமே வெற்றி படமாக அமைய மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் என அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தன. அதைத்தொடர்ந்து காக்கி சட்டை என்ற திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார். இடையிடையில் சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் பல படங்களில் தன்னை ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். தற்போது இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கிடையில் கடந்த 2010ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும் குகன் மற்றும் பவன் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதி இன்று (ஆகஸ்ட் 27) தங்களின் 14 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக ஆர்த்தி சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “என்னில் சிறந்த பகுதி நீங்கள். உங்களை அளவே இல்லாமல் நேசிக்கிறேன்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
எனவே சிவகார்த்திகேயன் – ஆர்த்தி ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.