நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியானது. அதன்படி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மோகன்லால், வித்யூத் ஜம்வால், மிர்ணாள் தாகூர் உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போல காமெடி கலந்த கதை களத்தில் அல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாக இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இதன் கூடுதல் தகவலாக SK23 படத்தின் படப்பிடிப்பு மார்ச் 21ஆம் தேதி தொடங்க இருக்கிறதாம். எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாகவே ஏ ஆர் முருகதாஸின் படங்கள் இந்திய அளவில் ஹிட்டடித்து தரமான படங்களாகவே அமைந்திருந்தன. குறிப்பாக விஜய் நடிப்பில் உருவான துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் சமூக கருத்துக்களை ஆழமாகவும் கமர்சியலாகவும் பதிவு செய்திருந்தது. எனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவுள்ள SK23 படமும் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.