நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் பட தயாரிப்பாளருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். அடுத்தது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் சிபி சக்கரவர்த்தி, விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயன் கைகோர்க்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இது தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார். எனவே யார் அந்த இயக்குனர்? என்று சமூக வலைதளங்களின் ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.