நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிறது. படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் நேற்று இந்த படத்தின் டைட்டில் டீசரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். இந்த டீசரின் மூலம் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரியவந்தது. அது மட்டும் இல்லாமல் இப்படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் ஆக்சன் படமாக உருவாகிறது. இந்நிலையில் அமரன் படத்தின் புதிய போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் மிலிட்டரி லுக்கில் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.