சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்த படங்களில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். தீவிரவாத தாக்குதலின் போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் முகுந்த் வரதராஜனாக நடித்திருந்த சிவகார்த்திகேயனின் நடிப்பும் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பலரும் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். அதன்படி ஏற்கனவே ரஜினி, சிவக்குமார், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்த படத்தில் இஸ்லாமியர்களை அவமதிப்பதாக கூறி பல எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கிறது. இருப்பினும் இந்த படம் அதையெல்லாம் உடைத்து எறிந்து வெற்றிப்பாதையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி இந்த படம் தற்போது மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. எனவே உலகம் முழுவதும் வெற்றி நடை போடும் இந்த படம் சுமார் 256 கோடி வசூலை கடந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (நவம்பர் 14) கங்குவா திரைப்படம் வெளியான போதிலும் அமரன் திரைப்படமும் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. எனவே இன்னும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.