சிவகார்த்திகேயனின் 21 வது படமாக உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அந்த வகையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாய் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இதனை எழுதி, இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி டெல்லியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு போட்டு காட்டப்பட்டுள்ளது. அவர்கள் அமரன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.