ரஜினிகாந்துக்காக சிவகார்த்திகேயன் பட டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பராசக்தி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் இவர், மதராஸி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்க ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் தோற்றத்தை பார்க்கும்போது ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய மற்ற படங்களில் ஹீரோவை வேறொரு பரிமாணத்தில் காட்டியது போல இந்த படத்திலும் சிவகார்த்திகேயனை வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ‘ஹண்டர்’ என்ற தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்ததாம். ஆனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் மற்ற மொழிகளில் வேட்டையன் தி ஹண்டர் என்ற தலைப்பில் வெளியானதால் ரஜினிக்கு சங்கடம் உண்டாகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த படத்தின் தலைப்பை மாற்றியதாக சொல்லப்படுகிறது. மேலும் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் படக்குழுவினர் இந்த படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்து விட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.