சின்னத்திரையில் தன் பயணத்தை தொடங்கி மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் முதியோர் வரை அனைவரையும் தன் நடிப்பால் வசியப்படுத்துபவர். 2023 நம்மிடம் இருந்து விடை பெற இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் பலருக்கும் இந்த ஆண்டு குறித்த நினைவலைகள் மனதில் அசை போட்டபடி நிற்கும். அதுபோல சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டில் மிகவும் பிடித்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை அவர் மிகவும் மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். இந்த ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றுள் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த “குட் நைட்”, அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த “போர்த்தொழில்”, கவின் நடித்த “டாடா”, ரியோ ராஜ் நடிப்பில் வெளியான “ஜோ”, சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “அயோத்தி”, ஹரிஷ் கல்யாணின் “பார்க்கிங்”, தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் பல புது முகங்கள் நடிப்பில் வரலாற்றுப்புனைவு படமாக உருவான “யாத்திசை” போன்ற படங்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக கூறியுள்ளார்.மேலும் இந்த படங்களின் இயக்குனர்களை நேரில் சந்தித்து கதை கேட்டுள்ளதாகவும்,இந்த புதிய இயக்குனர்களின் கதை சொல்லும் யுக்தி தனக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படமாக “யாத்திசை” படத்தைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.மிகவும் குறைவான பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான படத்தை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட் மட்டும் 50 கோடி என்ற அளவில் கொடுக்கப்பட்டிருந்தால் பாகுபலி போன்ற பிரம்மாண்டமான படத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். பல பெரிய படங்கள் வசூலில் மிரட்டி இருந்தாலும் குறைவான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் நல்ல கதை அம்சத்தை கொண்டிருந்ததால் பல ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.