சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு சிதம்பரத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜை உடன் தொடங்கப்பட்டது. அதன்படி சென்னை, மதுரை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 5) சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் – அதர்வா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இப்படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்களுக்கு நடைபெறும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.