நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அயலான். ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். SK21 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இப்படம் ராணுவம் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு SK21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி SK21 படக்குழுவினர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க உள்ளனர். அதாவது சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் SK21 படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமல்லாமல் டீசரையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.