பிரபல நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான உறுப்பினராகத் திகழ்ந்து வருபவர் குஷ்பூ. அதே சமயம் இவர் பாரத ஜனதா கட்சியிலும் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் மன்சூர் அலிகான் – திரிஷா விவகாரத்திற்கு கருத்து பதிவிட்ட போது திமுக குண்டர்கள் போல் சேரி மொழியில் எனக்கு பேச தெரியாது என்று பதிவிட்டார். இதில் சேரி மொழி என்ற வார்த்தை பட்டியல் இன மக்களை அவதூறாக பேசுவது போன்ற சொல்லாகும் எனக் கூறி பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக பேசி உள்ள குஷ்பு , “சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தம்” என ஒரு புதிய விளக்கத்தையும் கூறியுள்ளார். இருப்பினும் இது அரசியல் ரீதியாக தாழ்த்தப்பட்டோரின் மீது நடைபெற்ற நேரடியான தாக்குதல் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். மனதில் உள்ளதை தான் குஷ்பு கூறியிருக்கிறார். மேலும் பாஜக பெண் நிர்வாகிகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான போதும், மணிப்பூர் பிரச்சனையின் போதும் குஷ்பு எங்கே போனார். தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருப்பதால் கடமைக்கு செய்வது போல் மன்சூர் அலி கானை கைது செய்யும்படி வலியுறுத்தியுள்ளார்என்றும் பாஜக சார்பில் இக்கருத்தை பதிவிட்ட குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.