பிரபல பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலருக்கு கல்வி, உணவு, போக்குவரத்து, மருத்துவம் போன்ற வழிகளில் உதவி செய்து வந்தவர். மேலும் பல குடும்பங்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவிகளை செய்து வந்திருக்கிறார். இதனால் இவரை பொதுமக்கள் அனைவரும் ஹீரோவாகவும், கடவுளாகவும் போற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சோனு சூட் பீகாரில் ஆதரவில்லாத குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி தர முன்வந்துள்ளார்.
பீகாரில் வாழும் 27 வயதான பைரேந்திர குமார் என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக தனது முழு நேர வேலையை விட்டுவிட்டு ஆதரவற்ற குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினார். அவர் சோனு சூட்டின் பெயரில் அந்தப் பள்ளியை நடத்தி வருகிறார்.
இச்செய்தியை கேள்விப்பட்ட சோனு சூட், பைரேந்திர குமாரை நேரில் சென்று வாழ்த்தினார். அது மட்டுமல்லாமல் 110 மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியையும் சென்று பார்த்தார். மேலும் போதிய அளவு வசதிகள் இல்லாத அந்த பள்ளிக்கு, மாணவர்கள் சிறந்த முறையில் படிப்பதற்காக மிகப் பெரிய கட்டிடம் ஒன்றை அமைத்து தருமாறு பைரேந்திர குமாரிடம் கூறியுள்ளார். மேலும் வறுமைக்கு எதிராக போராடும் மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்.