தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் இழப்பு தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் விதையாய் விதைக்கப்பட்ட நிலையில் அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த முடியாத பலரும் தற்போது அவரது சமாதிக்குச் சென்றும், வீட்டிற்கு சென்றும் விஜயகாந்துக்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி கண் கலங்கியபடி விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரின் உருவப் படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். மேலும் விஜயகாந்தின் குடும்பத்தாருக்கும் தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சூரி, “கேப்டன் செய்த புண்ணியம், தர்மம் எல்லாவற்றையும் எல்லாரும் பேசி விட்டார்கள். சினிமாவில் செய்த நல்ல காரியங்களை எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் செய்துவிட்டு போய்விட்டார். நான் படப்பிடிப்பில் இருந்ததனால் என்னால் வர முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினர் அனைவரும் கேப்டனை நினைத்து மரியாதை செலுத்தினோம். வாழ்ந்தால் இவரை மாதிரி தான் வாழ வேண்டும் என்பதை பதிவு செய்துவிட்டு போய்விட்டார். ‘என்னத்த சம்பாதிச்சு என்னத்த வாழ போறோம் இருக்கிறவரை நாலு பேருக்கு நல்லது செஞ்சுட்டு போயிடுவோம்’ என்று மேடையில் சொன்னது போலவே வாழ்ந்து விட்டு போய்விட்டார். கேப்டன் அவர்கள் காலம் முழுக்க மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என்று பேசியுள்ளார்.