தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடியனாக இருந்து, பெயரையும் புகழையும் பெற்று அதன் பின்னர் ஹீரோவாக உருவெடுத்த நடிகர்கள் பலரும் இருக்கிறார்கள். அதில் கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு போன்ற நடிகர்களை சொல்லலாம். இப்போது நடிகர் சூரியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சூரி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரி, விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் பல பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகிறது. அதன்படி தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக களமிறங்கி கலக்கி வருகிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கருடன் என்ற படத்தில் முன்னணி நடிகர்களான சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்த போதிலும் சூரி தான் இதில் ஹீரோ. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட சசிகுமாரை விட சூரி அதிக சம்பளம் வாங்குவதாக செய்திகள் வெளியானது. மேலும் கொட்டுக்காளி போன்ற திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய சூரி, “நான் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன் என்று சொன்ன இயக்குனர்கள் பலரும் இப்போது என்னை காமெடி கதாபாத்திரங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று சொல்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு நடிகர் சூரி தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ஒரு ஹீரோவாக
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து விட்டார். எனவே இவர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக மட்டுமே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.