நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக திரைத்துறையில் நுழைந்து தற்போது ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் தான் நடிகர் சூரி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் உருவாகி இருக்கிறது. வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று (நவம்பர் 26) விடுதலை 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் பேசிய சூரி, “இசை வெளியீட்டு விழா மட்டும் இல்லாமல் திருமண விழா, காது குத்து விழா, திருவிழா என எந்த விழாவாக இருந்தாலும் அந்த இடத்தில் கடந்த 49 வருடங்களாக இளையராஜா தான் ஒரே நாயகன். சிறுவயதிலிருந்தே அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான். அப்படிப்பட்டவரின் இசையில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. விடுதலை 2 படத்தின் பாடலைக் கேட்ட ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்னை தொடர்பு கொண்டு இளையராஜா இப்படி ஒரு பாட்டு போட்டு வைத்திருக்கிறார் என்று பிரம்மித்தார்.
தினம் தினமும் உன் நெனப்பு பாடல் ரிலீஸுக்காக அவருடைய ஸ்டூடியோவிற்கு சென்றேன். அப்போது எல்லோரும் வந்து விட்டார்களா என அங்கிருந்தவரிடம் கேட்டேன். இன்னும் யாரும் வரவில்லை. இளையராஜா மட்டும்தான் உள்ளே இருக்கிறார் என்று அவர் சொன்னார். உடனே நான் பதறிப் போய் டிரைவரிடம் வண்டியை ஓரமா விட்டுடு என சொல்லிவிட்டேன். இளையராஜாவிடம் தனியாக அமர்ந்து பேசும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. சிறிது நேரம் கழித்து விஜய் சேதுபதி உள்ளே இளையராஜாவிடம் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து உடனே உள்ளே சென்றேன். அப்போது அவர் தன்னுடைய ஆரம்பகால அனுபவங்கள் குறித்து பேசினார். அதுவே எனக்கு பொக்கிஷம்” என்று பேசியுள்ளார்.
- Advertisement -