சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் சூரி. தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான விடுதலை, கருடன், விடுதலை 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர் அறிமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர், விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மாமன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூரியுடன் இணைந்து ராஜ்கிரண், பாபா பாஸ்கர், கீதா கைலாசம், பால சரவணன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு திருச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி வருகின்ற மார்ச் 10ஆம் தேதி திங்கட்கிழமையுடன் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படமானது 2025 கோடையில் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.