சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தர அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக கமிட்டானார். அந்த வகையில் சூரி நடிப்பில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கருடன். இந்த படத்தை காக்கிச்சட்டை கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் எழுதி, இயக்கியிருந்தார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் சூரிய உடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சூரி ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி இருந்தார். படமானது காதல், வஞ்சம், பழிவாங்கல், துரோகம் என அனைத்தும் கலந்த கிராமத்து கதை களத்தில் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கருடன் படம் இந்த வாரத்தில்
(வருகின்ற ஜூலை 5ஆம் தேதி) டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸான சில நாட்களிலேயே ஓடிடிக்கு வருவது சற்று அதிர்ச்சி அளித்தாலும் இனி எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.