தன் வசீகர குரலால் பல கோடி ரசிகர்களின் செவி வழி திறந்து நெஞ்சத்தில் இன்று வரை நீங்கா இடம் பிடித்திருப்பவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் இதே நாளில் (ஜூன் 4) 1946 இல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தவர். பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் என பல அவதாரங்களிலும் ஜொலித்தார். சினிமா துறையில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலரும் விரும்பும் பண்புள்ளவராக இருந்தவர் எஸ்.பி.பி. ஒன்றல்ல இரண்டல்ல 40,000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனையும் படைத்தார். வெறும் 12 மணி நேரத்தில் 21 பாடல்களை பாடி கொடுக்கும் அளவுக்கு கலையின் மீது ஈர்ப்பும் பேர் ஆர்வமும் கொண்டிருந்தவர். ஆறு முறை தேசிய விருது வென்று அவ்விருதுக்கு பெருமை சேர்த்தவர். மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற “தங்கத்தாமரை மகளே..” பாடலை மிகச் சிறப்பாக பாடியிருப்பார். அது மட்டும் இன்றி அப்பாடலை எழுதி அதற்காக தேசிய விருதையும் பெற்றவர் இவர். 16 இந்திய மொழிகளில் அம்மொழிக்குச் சொந்தக்காரர் போலவே எந்த ஒரு பிழையுமின்றி பாடும் திறமை கொண்டவர் எஸ்.பி.பி. இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளை வென்ற போதும் அதை கர்வமாக தலையில் ஏற்றி கொள்ளாத தன்மை கொண்டவர். பல கோடி ரசிகர்களின் நெஞ்சத்தை வென்ற எஸ்.பி.பி 2020 ஆம் ஆண்டு இம்மண்ணுலகில் இருந்து விடைபெற்றார். நம்மில் பலரும் ஏதோ ஒரு வகையில் தினம் தோறும் எஸ்பிபி யின் பாடலைக் கேட்காமல் அந்த நாளை கடந்து போயிருக்க மாட்டோம். பகலில் மறைந்து இரவில் தோன்றும் நிலவைப் போல், நம் பாடும் நிலா எஸ் பி பி யின் நினைவுகளும் நம்மை விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கும். எனவே அவருடைய 78வது பிறந்தநாளான இன்று அவரின் நினைவுகளை எண்ணி போற்றுவோம்.