சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மசாலா கதைய அம்சங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான கிராமத்து பின்னணியில் ரிலீசான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான திரைப்படத்தின் தாக்கம் தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும் என்று அந்த சமயத்தில் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு நட்பு, காதல், அரசியல், நம்பிக்கை, துரோகம் என அனைத்தையும் மதுரையின் பின்னணியில் எதார்த்தமாகவும் ரசிக்கும்படியும் அமைந்திருந்தது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன.
பரட்டை தலையுடன், கரடு முரடான தாடியுடன் பெல் பாட்டம் கால் சட்டையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சசிகுமார் மற்றும் ஜெய்யின் எதார்த்தம் நடிப்பு, கோலி குண்டு கண்களை உருட்டிக்கொண்டு பாவாடை தாவணியில், அளவான வசனங்களுடன் அழகாக நடித்திருந்த சுவாதி அன்றிலிருந்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட். கதைக்களம் மதுரையில் நடக்கிறது என்பதை வெறுமனே வார்த்தைகளால் மட்டும் கூறி விடாமல் நடிகர்களை மதுரை மண்ணின் மைந்தர்களாகவே ஜனரஞ்சகமாக காட்டி இருந்தார் இயக்குனரும் நடிகருமான சசிகுமார். நட்புக்காக சசிக்குமாரும் ஜெயும் சமுத்திரக்கனியின் மீது நம்பிக்கை கொண்டு செய்யும் ஒரு கொலை அவர்களின் வாழ்க்கையை வேறொரு பாதையில் தள்ளி விடுகிறது. சமுத்திரகனியின் அரசியல் லாபத்துக்காக தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பழிவாங்க துடிக்கும் கதாநாயகர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் விளைவுகளும் மீதி கதையாகும்.
ஜனரஞ்சகமாக நகரும் திரைக்கதைக்கு மத்தியில் கஞ்சா கருப்புவின் இயல்பான காமெடிகள் சிரிப்பு மலர்களை அங்கங்கே தூவிச் செல்லும். இத்தகைய திரைக்கதையில் எதிர்பாராத திருப்பமாக பல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. முக்கியமாக சொல்ல வேண்டுமெனில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். இன்றளவும் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஒரு முக்கியமான திரைக்கதை அம்சம் கொண்ட படங்களில் சுப்ரமணியபுரத்திற்கு தனி இடம் உண்டு.
இத்தகைய அம்சங்களை கொண்ட சுப்ரமணியபுரம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரீரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.