இயக்குனர் சுதா கொங்கரா கடந்த 2016 இல் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். எனவே இரண்டாவது முறையாக சூர்யாவுடன் கைகோர்க்க திட்டமிட்டு புறநானூறு எனும் திரைப்படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்த படமானது 1950 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் பின்வரும் காலத்தில் சில அரசியல் சிக்கல்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். எனவே அவருக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் புறநானூறு திரைப்படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விடும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மாற்றப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சுதா கொங்கராவிற்கு புறநானூறு படம் தொடர்பான NOC இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இதன் காரணமாக இந்த படத்தின் தலைப்பு மாற்றி வைக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதிய தலைப்புடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.