‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதையடுத்து வம்சம், திருத்தணி, லத்தி, ட்ரிப் , எஸ்டேட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் சுனைனா நடித்திருக்கிறார்.
தற்போது இவர் மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் ‘ரெஜினா‘ என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சுனைனாவுடன் விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன், பவா செல்லதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
எல்லோ பியர் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், சதீஷ் நாயர் இசையிலும் உருவாகியுள்ளது. பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய சுனைனா, “2006ல் என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப்பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவிற்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானித்து இருக்கவில்லை. அப்போது விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம். அதற்கு முன்பு நடிகை ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் சந்திரமுகி. தொடர்ந்து கஜினி உள்ளிட்ட படங்களை பார்த்தபோது, நான் ஒரு தென்னிந்திய மொழி நடிகையாகத்தான் ஆகவேண்டும் என முடிவு செய்தேன்.
அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம் சின்சியாரிட்டி, நேர்மை எல்லாம் இருந்தது. இப்போது வரை அது இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ், இயக்குனர் டொமின் டி சில்வா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரிடமுமே இதே போன்ற ஒற்றுமை இருந்தது. இந்த நிகழ்விற்கு வெங்கட் பிரபு சார் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அவருடைய சரோஜா படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை. எனக்கு எப்போதெல்லாம் மனதில் வருத்தம் தோன்றுகிறதோ அந்த சமயத்தில் சரோஜா படத்தில் வரும் பிரம்மானந்தம் சார் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து ரசிப்பேன். நான் மட்டுமல்ல.. என் குடும்பமும் சேர்ந்து தான். இந்தப்படத்திற்காக அதிக அளவில் அன்பையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம்” என்றார்.