தமிழ் சினிமாவில் சுந்தர்.சி ஒரு கமர்சியல் இயக்குனராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் இன்று (ஏப்ரல் 24) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இது தவிர இயக்குனர் சுந்தர்.சி, நயன்தாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைக்கிறார். மூக்குத்தி அம்மன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்படம் உருவாகி வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
அதன்படி இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சுந்தர்.சிக்கும், நயன்தாராவிற்கும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், சுந்தர்.சி இப்படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க திட்டமிட்டதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் பிறகு அந்த பிரச்சனை முடிந்து விட்டது எனவும் தற்போது சுமூகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் கலந்து கொண்ட சுந்தர். சியிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சுந்தர்.சி, “எனக்கும் நயன்தாராவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தகவல் எப்படி பரவியது? ஏன் பரவியது? என்று தெரியவில்லை. நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகை. படப்பிடிப்பில் அரை மணி நேரம் கேப் இருந்தால் மட்டும்தான் நான் அவரை கேரவனுக்கு போகச் சொல்வேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதுதான் நயன்தாராவின் பழக்கம். இதுபோன்ற தேவையில்லாத குழந்தைகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -