சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995 இல் ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் பாட்ஷா. இதற்குப் பின்னர் ரிலீசான பல மாஸ் படங்களுக்கு மூலாதாரமாக விளங்கிய படம் தான் பாட்ஷா. இன்று வரை ரிலீஸ் ஆகும் பல பெரிய ஹீரோக்களின் படங்களில் பாட்ஷா படத்தின் சாயலை நம்மால் பார்க்க முடியும். அந்த அளவுக்கு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்திருந்தது பாட்ஷா. அன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து 15 மாதங்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. இத்தனை பெருமைகளை பெற்ற பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக அப்போதே இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா விரும்பினார். இதனால் ரஜினியிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் ரஜினி எக்காரணம் கொண்டும் தான் நடித்த படங்களுக்கு இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். அதன்படி இதுவரை அவர் நடித்த பிளாக்பஸ்டர் படங்களின் பாகம் 2 என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. ரஜினி நடிப்பில் பிரமாண்ட வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட லாரன்ஸ் தான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இன்றைய இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் நெல்சன் திலீப் குமார். இவருடைய கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்த போதிலும் அடுத்ததாக விஜய் வைத்து இயக்கிய பீஸ்ட் படத்தில் சற்று சறுக்கினார். இதனால் பலரும் இணையதளத்தில் பீஸ்ட் படத்தையும் இயக்குனர் நெல்சனையும் எதிர்மறையாக விமர்சித்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி ஜெயிலர் படத்தில் மாஸாக கம்பேக் கொடுத்திருந்தார் நெல்சன். ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூலித்து எதிர்பாராத வெற்றியை பெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் தரமாக அமைந்து இப்படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்தன. சமீபத்தில் வெளியான ரஜினி படங்களிலே இப்படம் மாபெரும் வசூலையும் படைத்துள்ளது. எனவே ஜெயிலர் படம் சாதாரண படமாக இல்லாமல் ஒரு பிராண்டாக உருவெடுத்தது. இதனை சரியான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளவே ஜெயிலர் 2 படத்தின் வேலைகளும் மும்முறமாக நடந்து வருகின்றன. பாட்ஷா படத்தில் இரண்டாம் பாகத்திற்கு நோ சொன்ன ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்திற்கு ஓகே சொல்லி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு வழி வகுக்கும்.