மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை சில காரணங்களுக்காக வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் வெளியானது. சுமார் 233 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து பிரபல மலையாள நடிகரும் ஒன்றிய பாஜக இணையமைச்சருமான சுரேஷ் கோபியிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது சுரேஷ் கோபி அவர் கார் அருகே சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது, ஆத்திரமடைந்த சுரேஷ் கோபி, அங்கிருந்த செய்தியாளர் ஒருவரை தாக்கியுள்ளார்.
நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்கும் ஊடகங்கள் ஏன் கேட்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்து ஒரு கட்டத்தில் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய அவர் ஊடகங்களின் மைக் உள்ளிட்டவற்றைப் பிடுங்கி எறிந்தார்.
அதனை தொடர்ந்து திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
மதிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மீது எஃப் ஐ ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது . அவர் அளித்த புகாரில் தன்னையும் தனது பாதுகாப்பு அதிகாரியையும் காரில் ஏறவிடாமல் தடுத்து இடையூறு செய்ததுடன் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.