சூர்யா 45 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் சூர்யா, வாடிவாசல் திரைப்படத்திலும், நேரடி இந்தி படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் சூர்யா அடுத்தது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 45 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து காஷ்மிரா பர்தேசி, ருக்மினி வசந்த், மிர்ணாள் தாகூர் ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதால் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் கோயம்புத்தூரில் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் கடவுள் தொடர்பான பேண்டஸி படமாக உருவாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்தது இந்த படம் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கிறது.