முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலைத்துறையினர்கள் ஒன்று திரண்டு கலைஞர் 100 விழாவை மிகப்பிரமாண்டமாக கொண்டாடினர். இவ்விழா நேற்றைய முன் தினம் சென்னையில் நடைபெற்ற நிலையில் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இயக்குனர் அமீரும், வெற்றிமாறனுடன் இணைந்து வந்துள்ளனர். அச்சமயம் நடிகர் சூர்யா உள்ளே வர அமீரை கட்டி அணைத்து ‘அண்ணா எப்படி இருக்கீங்க’ என்று நலம் விசாரித்துள்ளார். இந்நிகழ்வை பார்த்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே அமீருக்கும் ஞானவேல் ராஜாவிற்கும் இடையேயான பருத்திவீரன் விவகாரத்தில் சூர்யா வாய் திறக்காமல் இருந்ததனால் அமீருக்கும் சூர்யாவுக்கும் இடையில் மனக்கசப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதே சமயம் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் நடிப்பாரா?மாட்டாரா? என்ற கேள்வியும் குழப்பமும் இருந்து வந்தது. தற்போது கலைஞர் 100 விழாவில் சந்தித்த அமீரும் சூர்யாவும் தங்களின் அன்பை வெளிப்படுத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ஆகையால் வாடிவாசல் படத்தில் சூர்யாவும் அமீரும் இணைந்து நடிப்பது உறுதியாகி விட்டது எனவும் விரைவில் இந்த படம் தொடங்கப்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.