அஜித்தின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித், ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படமும் ஏப்ரல் 10 அன்று வெளியாக இருக்கிறது. இவ்வாறு இந்த ஆண்டில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. இருப்பினும் நடிகர் அஜித் இன்னும் 9 மாதங்களுக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன் கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே சிறுத்தை சிவா, விஷ்ணுவரதன் ஆகியோர் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கார்த்திக் சுப்பராஜ், அஜித்தின் 64வது படத்தை இயக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தற்போது சூர்யா நடிப்பில் ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து நிவின் பாலி, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.