Homeசெய்திகள்சினிமாஅனைவருக்கும் சமமான கல்வி வழங்குவதே அகரம் அறக்கட்டளையின் நோக்கம்...... நடிகர் சூர்யா!

அனைவருக்கும் சமமான கல்வி வழங்குவதே அகரம் அறக்கட்டளையின் நோக்கம்…… நடிகர் சூர்யா!

-

கடந்த 1979 ஆம் ஆண்டு சிவகுமார் தனது 100வது படத்தின் போது ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் பல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதி உடைய மாணவர்களை அடையாளம் கண்டு அவளுக்கு இந்த அறக்கட்டளையின் மூலம் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகள் சிவகுமாரின் பொறுப்பில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் நிறுவனம் இதற்கு பொறுப்பேற்று கல்விப் பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44 வது ஆண்டு விருது வழங்கும்
விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பெற்றோரை இழந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 25 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10000 வீதம் 25 மாணவர்களுக்கு ரூ.2,50,000 வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களின் தாய் தமிழ் பள்ளிக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க முடியும். நம் அனைவரிடமும் ஒரு திறமை நிச்சயமாக இருக்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுவது கல்வியின் நோக்கம். மதிப்பெண்கள் பெறுவது மட்டும் கல்வி அல்ல. அன்றாட வாழ்க்கை முறைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பினை புரிய வைப்பதும் கல்விதான். நம் நாட்டில் உள்ள சாதி மத பேதங்கள் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டிய அவசியத்தை கற்றுத் தருவதும் கல்விதான்” என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர் சிவகுமார், “இந்த அறக்கட்டளை பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை எனது பிள்ளைகள் தற்போது சிறப்பாக செய்து வருகின்றனர். கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கை தரத்தை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். என்னை போல ஏழ்மை குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல தடைகளைத் தாண்டி பெற்ற வெற்றி இது. இன்னும் தொடர வேண்டிய பயணம் நிறைய உள்ளது. அதனால் மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல் வாழ்க்கையில் மேன்மேலும் உயர வேண்டும்” என்று கூறினார்.

அதன் பிறகு பேசிய நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 வருடங்களுக்கு முன்னரே விதைக்கப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வரும் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் தொடர்ச்சியே அகரம் பவுண்டேஷன் ஆகும். அனைவருக்கும் சரியான சமமான கல்வியில் வழங்க அகரம் அறக்கட்டளை முயற்சி எடுத்து வருகிறது. கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள் வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள்.

மதிப்பெண்கள் மட்டுமே கல்வி கிடையாது அந்த கல்வியை அழகாக வைத்திருப்பதற்கு ஆசிரியர்கள் தேவை. அப்படிப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். கல்வியில் இருந்து விடுபட்ட மாணவர்களை அரசாங்கத்துடன் இணைந்து அகரமும் அவர்களுக்கு மீண்டும் கல்வியை கொடுக்க முயற்சித்து வருகிறது. மனிதர்களுடனும் அமைப்புகளுடனும் சேர்ந்து 5200 மாணவர்களின் வாழ்க்கையை எங்களால் தொட முடிந்தது. ஆனால் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் ஒரு லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற முடிந்துள்ளது” என்று சூர்யா பேசியுள்ளார்.

MUST READ