சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் சில படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் கங்குவா படப்பிடிப்பின் போது சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்ட காரணத்தால் சூர்யா தற்போது ஓய்வெடுத்து வருகிறார். எனவே அவரின் உடல்நிலை முழுமையாக குணமடைந்ததும் சுதா கொங்கரா இயக்கவுள்ள புறநானூறு படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இப்படி ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் பலரும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா காளையை அடக்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டார். வாடிவாசல் படத்திற்காக ரோபோ காளை ஒன்று தயாராகி வருவதாகவும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். ஆனால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் விடுதலை இரண்டாம் பாகத்தின் பணிகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இயக்குனர் வெற்றிமாறன் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் ட்ரெயின் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. நடிகர் சூர்யா விரைவில் புறநானூறு படப்பிடிப்புகளை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வாடிவாசல் படத்தை தொடங்குவதற்கு வெற்றிமாறனிடம் சூர்யா கூறியிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.