காதலருடன் திருமணம்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை டாப்ஸி…
கோலிவுட் திரையுலகம் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி மொழி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தில், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், வலை, ஆரம்பம், வை ராஜா வை, முனி 3, கேம் ஓவர், திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக தமிழில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அனபெல். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இந்தியிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இந்தியிலும் அவர் டாப் நடிகையாக வலம் வருகிறார். இறுதியாக ஷாருக்கான் நடித்த டன்கி படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, நடிகை டாப்ஸி தனது காதலர் மதியாஸ் போ என்பவரை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து பேசிய டாப்ஸி, திருமண சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனக்கு திருமணம் இல்லை என்று மறுப்பு தெரிவித்த அவர், 10 ஆண்டுகளாக நானும், மத்தியாசும் காதலித்து வருகிறோம். ஆனால், இப்போது தான் காதல் என பேசப்படுகிறது. மேலும், இதுவரை நாங்களே திருமணம் குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.