சினிமாவில் 19 ஆண்டுகள் நிறைவு… தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துகள்…
- Advertisement -
சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை தமன்னாவுக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா. சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார். இவர் 2005-ம் ஆண்டு வெளிவந்த சந்த் ச ரோஷன் செஹ்ரா என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். அடுத்து, தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இப்படத்தில் வில்லியாக அவர் நடித்திருந்தார். முதன்முதலாகவே எதிர்மறை வேடத்தில் நடித்திருந்தாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தமன்னா. இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யா நடித்த வியாபாரி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இரண்டு படங்களுக்கு பிறகு தமன்னா கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், அமைதியான மாணவி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி தமன்னாவுக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தன. மேலும், அவரை முன்னணி நடிகையாகவும் முன்னிறுத்தியது. கல்லூரி திரைப்படம் தமன்னாவில் திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து, படிக்காதவன், பையா, கண்டேன் காதலை, தில்லாலங்கடி, சிறுத்தை, வீரம், தோழா, தர்மதுரை, தேவி, சுறா என பல படங்களில் நடித்திருக்கிறார். விஜய், ஜெயம்ரவி, கார்த்தி, விஜய் சேதுபதி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். பாகுபலி, பையா, ஆகிய திரைப்படங்கள் தமன்னாவுக்கு வெற்றிப்படங்கள் ஆகும். அவரது நடிப்பில்தமிழில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ரஜினியுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை தமன்னா திரை உலகில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கு நடிகை காஜல் அகர்வால் உள்பட நடிகர், நடிகைகள் பலரும், ரசிகர்களும் தமன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள தமன்னா, இது வெறும் தொடக்கம் தான் என்றும் பதிவிட்டுள்ளார்.