திரைப்படத்துறையினர், தே.மு.தி.க தொண்டர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதனையும் பெரிதும் பாதித்துள்ளது விஜயகாந்தின் மறைவு. உடல் நலக்குறைவினால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சென்னையில் விஜயகாந்தின் உயிர் பிரிந்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இன்று தீவித்திடலுக்கு மாற்றி அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 4 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ்நாடு திரைப்படக் கல்லூரிக்கு விஜயகாந்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் எழுந்துள்ளது. ஏற்கனவே எம்.ஜி.ஆர் பெயர் இத் திரைப்படக் கல்லூரிக்கு சூட்டப்பட்டுள்ளதால் குறைந்தபட்சம் கல்லூரியின் ஏதாவது ஒரு கட்டிடத்திற்கு மட்டுமாவது விஜயகாந்தின் பெயர் சூட்டப்பட்டு என்றென்றும் அவர் நம் நினைவில் இருக்கும் படிச் செய்ய அரசு முன் வர வேண்டும் என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன. தொடக்க காலத்தில் திரைப்படக் கல்லூரியில் படித்திருக்கிறேன் என்று ஒருவர் கூறினாலே அவரை மட்டமாக பார்க்கும் நிலை தான் இருந்து வந்தது. இந்த நிலையில் அன்றைய திரைப்படக் கல்லூரியில் படித்த மாணவர்களின் திறமையை மிகச் சரியாக பயன்படுத்தி “ஊமை விழிகள்” படத்தில் படித்திருந்தால் விஜயகாந்த். மாபெரும் வெற்றி அடைந்த அப்படத்திற்குப் பின்னர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே ஒரு தனி மரியாதை கிடைத்தது. இதுவரை சுமார் 150 படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். இதில் பெரும்பாலான படங்களில் திரைப்படக் கல்லூரியில் படித்து வெளிவந்த மாணவர்களை புதுமுக இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிரார். இவரைத் தவிர வேறு எந்த நடிகரும் இவ்வளவு அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டு அரசு திரைப்படக் கல்லூரிக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட முன் வர வேண்டும் என்று திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.