நடிகர் அருண் விஜய் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். அந்த வகையில் இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். இவருடைய நடிப்பில் வெளியான தடையறத் தாக்க, குற்றம் 23, தடம் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது நடிப்பில் தற்போது ரெட்ட தல எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இவர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த அருண் விஜயின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாலாவின் முந்தைய படங்களை போல இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதே சமயம் அருண் விஜயும் வித்தியாசமான தோற்றத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் IIT மெட்ராஸ் வளாகத்தில் நடைபெறும் Techofes 2025 விருது வழங்கும் விழாவில் நடிகர் அருண் விஜய்க்கு வணங்கான் படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Techofes என்பது ஆண்டுதோறும் IIT மெட்ராஸில் நடத்தப்படும் ஒரு பிரபலமான விழா. இந்த விழாவில் தமிழ் திரைப்படத்துறையில் சிறந்த படைப்புகளை கெளரவிக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.