நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் சமந்தா. இதற்கிடையில் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண உறவு முடிவுக்கு வந்தது. அதன்படி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றனர். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மந்திரி கொண்டா சுரேகா, நாக சைதன்யா – சமந்தா இருவரின் விவாகரத்திற்கு பாரத ரக்ஷா சமிதி தலைவர் கே.டி இராமராவ் தான் காரணம் என்று கூறியிருந்தார். அதாவது கே.டி. ராமராவ் தெலுங்கு நடிகைகளை படுக்கைக்கு அழைத்து அவர்களை துன்புறுத்துவார். அதற்கு பயந்து அந்த நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களை விடுவதில்லை என்று கூறியிருந்தார். மேலும் அதுபோன்று கே.டி. ராமாராவுடன் சமந்தாவை தொடர்புபடுத்தி பேசி பரபரப்பை கிளப்பினார் கொண்டா சுரேகா. இவருடைய இந்த சர்ச்சை பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்த நிலையில் நாகார்ஜுனா, நானி போன்ற பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து சுரேகாவிற்கு கே டி ராமாராவ், இது தொடர்பாக அவதூறு வழக்கு தொடர் போவதாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில்தான் கொண்டா சுரேகா சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு சமந்தாவிடம் மன்னிப்பு கோரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனது கருத்தின் நோக்கம் பெண்களை ஒரு தலைவர் இழிவு படுத்துவதை கேள்வி கேட்பது தானே தவிர உங்களை காயப்படுத்துவதற்காக இல்லை. என்னுடைய கருத்துக்களால் நீங்களும் உங்களின் ரசிகர்களோ புண்பட்டிருந்தால் என்னுடைய கருத்துக்களை நிபந்தனை இன்றி வாபஸ் பெறுகிறேன். தவறுதலாக நினைக்க வேண்டாம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் கே டி ராமாராவ் குறித்து தான் சொன்ன கருத்தில் பின் வாங்கப் போவதில்லை எனவும் அவரால் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.