தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இவர், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல் ராய், தனுஷ் கூட்டணியில் அத்ரங்கி ரே எனும் திரைப்படமும் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறது. அதன்படி இந்த படத்திற்கு தேரே இஷ்க் மெய்ன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கலர் எல்லோ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்கிறார்.
ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் சமீபத்தில் கிரித்தி சனோனின் ப்ரோமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த படமானது 2025 நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பை நேற்று (பிப்ரவரி 14) டெல்லியில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.