ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வந்தது.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்றது. இதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லால் சலாம் படத்திலும் அவர் இஸ்லாமியராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைவர் 170 படத்தின் முதல் தோற்றம் டிசம்பரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி டிசம்பர் 12-ம் தேதி இப்படத்தின் முதல் தோற்றம் படத்தின் தலைப்பு வெளியாகும் என்று தெரிகிறது.