விஜய் பிறந்தநாள் பரிசாக ரீ ரிலீஸாகும் அழகிய தமிழ் மகன்
விஜய் பிறந்தநாள் அன்று அழகிய தமிழ் மகன் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.
அண்மைக் காலமாக ஹிட் திரைப்படங்கள் அனைத்தும் மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. சுமார் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மறுவெளியீட்டின்போதும் சுமார் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து அஜித் நடித்த பில்லா, மங்காத்தா ஆகிய திரைப்படங்களும் மறுவெளியீடு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ஹிட் அடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னி்ட்டு வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன். இத்திரைப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் மட்டுமன்றி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பில் விஜய் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷ்ரேயா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், அழகிய தமிழ் மகன் திரைப்படமும் வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய் பிறந்தநாள் தினத்தன்று மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாம்.