தமிழகத்தின் தலைநகரமே வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், குறை சொல்வதை விட்டுவிட்டு உச்ச நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மிக்ஜாம் புயல் காரணமாக தலைநகர் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனை சரி செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அரசையும், அரசு அதிகாரிகளையும் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, அனைவரும் உதவ வேண்டும் என்றும், உச்ச நடிகர்கள் நிச்சயம் உதவி செய்ய வேண்டும் என இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.
இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.