நடிகர் தனுஷ் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதேசமயம் இவர் இயக்குனராகவும் உருவெடுத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்கள் எப்படி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோ அதுபோல வடசென்னை திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து அவர்களின் மனதில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தனுஷின் கேரியரிலும் முக்கியமான படமாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ், அமீர், டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை 2 திரைப்படம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் வடசென்னை 2 திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவில்லை எனவும் அவரது உதவி இயக்குனர் கார்த்திகேயன் தான் இயக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. அத்துடன் நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடிக்க வில்லையாம். அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் வேறு எந்த நடிகர் வட சென்னை 2 திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. எனவே இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -