சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கங்குவா திரைப்படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் டெடி – 2, எக்ஸ் மீட்ஸ் ஒய், தங்கலான் ஆகிய படங்களில் தயாரிப்பு பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றிருந்தார். இந்தத் தொகையில் 45 கோடி ரூபாய் மட்டும் திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா மீதமுள்ள 55 கோடியை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான மனுவில், மீதமுள்ள தொகையை திருப்பி தராமல் கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அதேசமயம் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்ட காரணத்தால் தங்கலான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் தெரிவித்திருக்கிறார். மேலும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மீதித்தொகை நாளைக்குள் (நவம்பர் 8) வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், மீது தொகையை செலுத்தியது குறித்து தெரிவிக்கும் வகையில் வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்தி வைத்துள்ளார். எனவே நாளை மீதத்தொகை செலுத்தப்படும் பட்சத்தில் கங்கவா திரைப்படம் வெளியாக எந்தவித தடையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.