நடிகர் ஆர் ஜே பாலாஜி, தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான LKG, வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி, கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
தரமான காமெடி மற்றும் எமோஷனல் படமாக இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிறு கிராமத்தில் முடி திருத்தும் கலைஞராக இருக்கும் ஆர் ஜே பாலாஜி இந்திய அளவில் புகழ்பெற்ற ஹேர் ஸ்டைலிஷ்ட்டாக மாற வேண்டும் என்ற தனது கனவில் ஜெயித்தாரா என்பதை பற்றிய கதை தான் சிங்கப்பூர் சலூன். படத்தில் சத்யராஜ் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருடைய காமெடி மிகச் சிறப்பாக அமைந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சத்யராஜ் நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடியில் பொளந்து கட்டி உள்ளார். அதேசமயம் படத்தில் நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கேமியா ரோலில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர் அரவிந்த்சாமியும் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவ்வாறு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வரும் சிங்கப்பூர் சலூன் படம் முதல் நாளில் 2 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதால் வரும் நாட்களிலும் இப்படம் நல்ல வசூலை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் பட குழுவினர், பிளாக்பஸ்டர் வெற்றிக்காக நடிகர் அரவிந்த்சாமிக்கு, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.