Homeசெய்திகள்சினிமாதி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் - ஆஸ்கர் வென்றது எப்படி?

தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் – ஆஸ்கர் வென்றது எப்படி?

-

‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற குறும்படம் ஆஸ்கர் விருது வென்று  உலகத்தின் கவனத்தை தமிழ் நாட்டின் பக்கம்  ஈர்த்துள்ளது.

ஆசியாவிலேயே பழமையான முகாமான முதுமலையில் உள்ள தெப்பாக்காடு யானைகள் முகாமை  சுற்றி பயணிக்கிறது இந்த ஆவண குறும்படம். தெப்பாக்காட்டில் வனத்துறை கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணி செய்து  வருகிறார் பொம்மன்.

தாய் யானை கரன்ட் ஷாக் அடித்து இறந்துவிட, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடைத்த குட்டி யானை ரகுவை வளர்க்கும் பொறுப்பு பொம்மனிடம் கொடுக்கப்படுகிறது. பொம்மனும் அவருக்கு உதவியாக இருக்கும் பெல்லியும் சேர்ந்து ரகுவை மீட்டெடுத்து பாசமாக வளர்கின்றனர்.   இருவரிடமும் ஒட்டிக்கொண்ட ரகு  பொம்மன், ரகுவை சக யானைகளின் வாழ்வை வாழ காட்டுக்குள் விட்டாலும்,  அவற்றுடன் சேர மறுக்கிறது.

ரகுவிற்கு பிறகு புதிதாக அம்மு குட்டி என்ற ஒரு குட்டியானையும் பொம்மன் – பெல்லியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரகுவும், அம்முகுட்டியும், பொம்மன் – பெல்லியின் உலகமாகி, நால்வரும் குடும்பமாகவே மாறிவிடுகின்றனர்.  பின்னர்  பொம்மன் – பெல்லி திருமணம் என நாட்கள் நகர்கின்றன. இந்த நிலையில், ரகுவை வெறு ஒருவரிடம் பராமரிப்புக்காக ஒப்படைக்க  வனத்துறையால்  அழைத்து செல்லப்படுகின்றது.

குழந்தையை இழந்தது போல் பொம்மனும், பெல்லியும் உடைந்துபோகின்றனர். எனினும் அம்மு குட்டியின் இருப்பு இருவரையும் கொஞ்சம் ஆசுவாசப்படுக்கிறது. கைவிடப்பட்ட யானை குட்டிகளை வளர்ந்த முதல் தம்பதி என்று பொம்மனும் – பெல்லியும் அறியப்படுகிறார்கள்.

ரகு – பொம்மன் – பெல்லி – அம்முகுட்டி என நால்வருக்கும் இடையேயான உணர்வை சிறந்த காட்சிகள் மூலம் தத்ரூபமாகவும், அதேவேளையில் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளால் வனவிலங்குகள் சந்தித்த, சந்திக்கின்ற இழப்புகளை ஆழமாக பதிவு செய்திருந்தது இந்தக் குறும்படம்.

இதை  கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார்.  குனீத் மோங்கா தயாரித்த இந்த ஆவணப் படத்தின் ஒளிப்பதிவும், இசை, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாக பொருந்தியுள்ளன. அதற்கான அங்கீகாரமாகத்தான் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் வென்றிருக்கிறது. சுமார் 40 நிமிடங்கள் கொண்ட   ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படத்தை  நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.

MKStalin

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில் பொம்மன் -பெல்லி தம்பதி இன்று சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதுமலை தம்பதி பொம்மன் – பெல்லி வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

MUST READ