சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாளத் திரைப்படமான இப்படத்தை தமிழ் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து பாராட்டி வருகின்றனர். 100 கோடி வசூலை தாண்டி இப்படம் சாதனை படைத்து வருகிறது. இன்னமும் கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது மஞ்சுமெல் பாய்ஸ். திரும்பிய திசை எல்லாம் இப்படத்தை பற்றிய பேச்சுகள் தான். பல திரை பிரபலங்களும் இப்படத்தின் இயக்குனரை நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான சிதம்பரம் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக அறியப்படுபவர் நடிகை பிராப்தி எலிசபெத். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதை புகாராக முன்வைக்கும் பெண்கள் பயன்படுத்தும் #Metoo என்னும் சொல்லை பயன்படுத்தி சிதம்பரம் மீதான பாலியல் குற்றச்சாட்டை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதற்கான ஆதாரங்களாக தன்னிடம் வாட்ஸ் அப் மெசேஜ்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். சிதம்பரம் இயக்கிய முந்தைய படமான ஜான் இ மேன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இந்த பிராப்தி எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் படப்பிடிப்புகளின் போதும் அவருக்கு பல்வேறு விதங்களில் இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.