இலங்கையில் கோட் படப்பிடிப்பு நிறைவு… விரைவில் வெளியாகும் அப்டேட்….
இலங்கையில் நடைபெற்று வந்த கோட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது .
ஒட்டுமொத்த இந்திய திரைஉலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் கோட். அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்.
இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரேம்ஜி உள்பட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் மற்றும் சென்னை என மாறி மாறி நடைபெற்று வந்தது. அண்மையில் புதுச்சேரியில் அனுமதியின்றி வெடிபொருட்களை வெடிக்க வைத்ததாக புகாரும் எழுந்தது.
இந்நிலையில், கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியை அடுத்து, இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் விஜய் இல்லாமல் மற்ற நடிகர்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில், இலங்கையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் 5-ம் தேதி கோட் திரைப்படம் வௌியாகிறது.