நடிகை திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யுமாறு பல்வேறு அமைப்புகளும் புகார் அளித்து வந்தன. மன்சூரின் அநாகரிகமான பேச்சுக்கு முதலில் திரிஷா பதிலடி கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதற்கு ஆதரவு தெரிவித்து லோகேஷ் கனகராஜும் தனது கருத்தை பதிவு செய்தார். பின்னர் நடிகை குஷ்பூ இதனை கண்டித்து திரிஷாவிற்காக குரல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்களும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு மன்சூர் அலிகான் “நான் த்ரிஷாவை பெருமையாகத்தான் கூறியிருந்தேன் ஆனால் அந்த வீடியோவை யாரோ தவறாக சித்தரித்து பரப்பி விட்டனர். இதெல்லாம் ஒரு பிரச்சினையாக பார்க்காதீர்கள் போய் பொழப்ப பாருங்க ” என்று அசால்டாக பதில் அளித்து இருந்தார். மேலும் இந்த பிரச்சனை சம்பந்தமாக திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், நடிகர் சங்கம் இது தொடர்பாக தன்னிடம் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார்.
இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையமும் களத்தில் இறங்கி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது காவல்துறை சட்டப்படி வழக்கினை பதிந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.