இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இசைஞானி இளையராஜா, ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இது தொடர்பான வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் நடைபெற இருக்கிறது. மேலும் ஐதராபாத் திரிதண்டி சின்ன ஜீயர் நாராயண ராமானுஜர் இதனை வெளியிட உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தைச் சேர்ந்த சடகோப ராமானுஜர் ஜீயர் இதனைப் பெற்றுக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கருவறைக்குள் சென்ற இளையராஜாவை அங்குள்ள ஜீயர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் இளையராஜா அர்த்தமண்டப படியில் நின்றவாறு கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதாவது அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்று பாவிப்பதாகவும் அதற்குள் செல்ல ஜீயர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்பதனால் இளையராஜா வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இளையராஜா இதனை ஏற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
- Advertisement -