தக் லைஃப் ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தற்போது மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் இப்படமானது 2025 ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படக்குழு இந்த படத்தை அறிவித்த தேதிக்கு முன்னதாகவோ அல்லது அறிவித்த தேதிக்கு பின்போ வெளியிட திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
ஏனென்றால் கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் பிரபலங்களின் சம்பளம் தொடர்பான ஸ்ட்ரைக் நடைபெற இருக்கிறதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. கமல்ஹாசனுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் காரணத்தால் அங்கு இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.